logo

g

Wednesday, September 7, 2011

விலங்களுக்கு மட்டுமே நான் மனிதனாக தெரிகிறேன்!

  
அறிமுகத்திலோ அல்லது பழகிய பின்போ
எப்படியும் சந்திக்க நேர்ந்துவிடுகிறது
ஜாதியை அறிய முற்படும் மறைமுக கேள்விகளை!
 
அதில் தப்பியபோதும் பொருளாதாரத்தை
தரம் தூக்கி பார்க்கும் நவயுக நாகரீகத்திலிருந்து
மீள முடியவில்லை.
 
எல்லாம் பொருந்திய போதும்
ஏக்கம், ஏமாற்றம், இல்லாமை மற்றும் இழப்பு குறித்து
செய்ய‌படும் ஆராய்ச்சி தரும் வலி
எந்த அறுவை சிகிச்சையும் தருவதில்லை!
 
வேறு சாதி என்று தெரிந்த பின்னும் சுருங்கிய‌
நண்பனின் அம்மா முகமும்
ஆறு இலக்க சம்பளம் இல்லை என்று அறிந்த பின்
மாறிய அப்பாவின் நண்பர் முகமும்
இல்லாமை/இழ‌ப்புகள் குறித்து
உள்ளூர சந்தோஷத்துடன்
ஆறுதல்/ அறிவுரை சொல்லும்  சொந்தங்களும்
அடிக்கடி மனதோடு அரிப்பதுண்டு !



அத்தணை மனிதனும் ஏதோ
ஒரு காரணியின் அடிப்படையில்
ஒரு சிட்டையை என் மீது ஓட்டிவிட்டு
பின் அந்த சிட்டையின் அடிப்படையிலயே  என்னை
அறிமுகபடுத்தவும், விமர்சிக்கவும் செய்கிறான்.



எஞ்சிய வாழ்கையில் விலங்களுக்கு
மட்டுமே நான் மனிதனாக தெரிகிறேன்! - சத்யா