பொறாமைப்படும்படி வாழ்
என்று தானே போதிக்கிறீர்கள்
நான்கு பேர் வாழ்த்தும்படி வாழ் என்றல்லவே! பின்
நாங்கள் எப்படி சமதர்மம் மிக்க
சமூகத்தை உருவாக்க முடியும்?
அதிகாரம் தான் சுதந்திரம்
என்று தானே சொல்லி தருகிறீர்கள்! பின்
நாங்கள் எப்படி அறிவையும், உறவையும் தேடுவோம்?
சொந்த பந்த சுற்றத்தை விட அதிகம் சம்பாதித்துவிடு
ஊரே வியக்கும்படி வாழு என்று
வெட்டி வைராக்கியத்தை நெஞ்சில் விதைத்து
பணத்தையும், ஆடம்பரத்தையும் தேடி
ஓட தூண்டியது நீங்கள் தானே?
குழந்தை பருவத்தில் நீதி கதைகள் சொல்லி
உயர் பண்புகள் வளர்த்த நீங்கள் தானே
இளமை பருவத்தில் நடைமுறை நுணுக்கங்கள் என்ற பெயரில்
தவறுகளை சகித்துக்கொள்ளவும்
அந்தஸ்து காக்க பகட்டு பொய்கள் சொல்லவும்
முன்னேற்றத்துக்கு ஜாதியை பயன்படுத்திக் கொள்ளவும்
முடியாவிட்டால் லஞ்சம் கொடுக்கவும் பழக்கப்படுத்தி
வாழ்கையை வர்த்தக முறையில் அணுக கற்றுக் கொடுத்தது
பிறர் பொருளை விரும்பாதே என்ற நீங்கள் தானே
வசதி அதிகம் படைத்த ஒற்றை பெண்/ஆண் உள்ள
வீடாக வரன் பார்த்து வார்த்தை ஒப்பந்தமில்லாமலே
வரதட்சணை வாங்குவது/வசதியை பெருக்கிகொள்வது
நிமிர்ந்து நில் என்ற நீங்கள் தானே
வளர்ச்சிக்காக வளைந்து நில் முடிந்தால்
நேர்மையை கூட வளைத்து நில் என்றீர்கள்?
சில உறவுகளை தக்க வைத்துகொள்ள
விருப்பங்களை விற்கலாம் என்றும்
சில வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள
கொள்கைகளை விட்டு கொடுக்கலாம் என்றும்
யதார்த்த சூட்சமங்கள் உபதேசித்தது நீங்கள் தானே?
நீங்கள் அமைத்துக்கொடுத்த லட்சியத்தை நோக்கி
நீங்கள் சொல்லி தந்த வர்த்தக பாணியில் வேகமாக ஒடுகையில்
உங்களை இழுத்து செல்ல தெம்பின்றி
விட்டு செல்கிறோம் முதியோர் இல்லங்களில்
இதே முதியோர் இல்லத்தில்
இளைய தலைமுறையின் மேல்
ஆதங்கப்பட்டு அங்கலாய்க்கும் ஏதோ ஒரு நாளில்
கொஞ்சம் ஆழமாக சிந்தித்து பாருங்கள்
உங்களின் சமூக அந்தஸ்து மேம்படுத்திய
வழிநடத்தல் தான்
உங்களையும் ஓரம்கட்டி
எங்களையும் ஓய்வின்றி ஓட
செய்தது என்பது புரியலாம் – சத்யா
1 comments:
நிதர்சனமான உண்மை...
Post a Comment
அன்பான வாசகர்களே..
வந்துப் போனதற்கான தடயங்களை இங்கே விட்டுச் செல்லுங்கள்..