logo

g

Monday, October 24, 2011

மனதை பாதுகாக்க பல நாட்கள் மரப்பாச்சியாய் வளம் வரவேண்டி இருந்த‌து















பெரிய மனுசியான உடனே
உணர்ந்துவிடவில்லை பெண்மையை
கொஞ்ச கொஞ்சமாக உணர்ந்து ரசித்த நாட்கள்
இன்னும் ஈரமாக நினைவில்
பெண்மையின் மென்மையிலும் தன்மையிலும்
கடவுளின் அருகாமையை உணர்ந்த‌தாய் ஞாபகம்
வெளிவிவரம் தலைக்கேறிய போது
சந்தோஷங்கள் யாவும் சங்கடங்களாய் உறுத்தியது.
மனதை பாதுகாக்க பல நாட்கள்
மரப்பாச்சியாய் வளம் வரவேண்டி இருந்த‌து
பேசி புழ‌ங்க வேண்டிய இடங்களில்
உணர்வுகளை மறைக்க‌ திமிர் காட்டி தப்பிக்க நேர்ந்தது
கள்ள பாராட்டுக்கள் தவிர்க்க
அலட்சியத்தை கற்க வேண்டியாதாயிற்று
ஆறுதல் என்னும் ஆயுதம் கொண்டு
சிறைபிடிக்க வருவோரிடம் கர்வம் காட்டி ஒளிய நேர்ந்தது.
இப்படி என்னையும் என் மனதையும் உனக்காக‌ பாதுகாக்கும் பொருட்டு தான்
என் பெண்மையின் மென்மையை இழக்க நேரிட்டது என்பதை எப்படி சொல்ல‌
என் பெண்மையின் வன்மை குறித்து கேலி செய்யும் உன்னிடம் - சத்யா

Wednesday, September 7, 2011

விலங்களுக்கு மட்டுமே நான் மனிதனாக தெரிகிறேன்!

  
அறிமுகத்திலோ அல்லது பழகிய பின்போ
எப்படியும் சந்திக்க நேர்ந்துவிடுகிறது
ஜாதியை அறிய முற்படும் மறைமுக கேள்விகளை!
 
அதில் தப்பியபோதும் பொருளாதாரத்தை
தரம் தூக்கி பார்க்கும் நவயுக நாகரீகத்திலிருந்து
மீள முடியவில்லை.
 
எல்லாம் பொருந்திய போதும்
ஏக்கம், ஏமாற்றம், இல்லாமை மற்றும் இழப்பு குறித்து
செய்ய‌படும் ஆராய்ச்சி தரும் வலி
எந்த அறுவை சிகிச்சையும் தருவதில்லை!
 
வேறு சாதி என்று தெரிந்த பின்னும் சுருங்கிய‌
நண்பனின் அம்மா முகமும்
ஆறு இலக்க சம்பளம் இல்லை என்று அறிந்த பின்
மாறிய அப்பாவின் நண்பர் முகமும்
இல்லாமை/இழ‌ப்புகள் குறித்து
உள்ளூர சந்தோஷத்துடன்
ஆறுதல்/ அறிவுரை சொல்லும்  சொந்தங்களும்
அடிக்கடி மனதோடு அரிப்பதுண்டு !



அத்தணை மனிதனும் ஏதோ
ஒரு காரணியின் அடிப்படையில்
ஒரு சிட்டையை என் மீது ஓட்டிவிட்டு
பின் அந்த சிட்டையின் அடிப்படையிலயே  என்னை
அறிமுகபடுத்தவும், விமர்சிக்கவும் செய்கிறான்.



எஞ்சிய வாழ்கையில் விலங்களுக்கு
மட்டுமே நான் மனிதனாக தெரிகிறேன்! - சத்யா


Monday, August 8, 2011

பெயர் கேட்க ஆசை


கடைசிவரை பத்திரமாக‌
பாதுகாக்க ஆசைப்பட்டு
தொலைத்ததில் அதிமுக்கியமான ஒன்று
என் பெயர்
!
 
பிறந்தவுடன் சொந்தமாகும் முதல் அடையாளம்
உலகத்திடமிருந்து கிடைக்கும் முதல் அங்கீகாரம்

தேடி தேடி வைக்கப்பட்டாலும்
பெயர் என்னவோ
பேருக்குத்தான் வைக்கபடுகின்றன‌
.
 
குழந்தை பருவத்தில் கொஞ்சலிலும்
படிக்கும் பருவத்தில் எண்களிலும் - மறைந்து
நாளாவட்டத்தில் நட்பில் சுருங்கி
காலப்போக்கில் சுயமிழந்து
அக்கா, சித்தி, அத்தை, மேடம் என
வெறும் உறவு முறையின்
அடையாளமாகவே நின்றுவிடுகிறது

வங்கி சலானிலும்,  அடையாள அட்டையிலும்
எழுத்துக்களாய் மட்டுமே தேங்கி நிற்கும்
என் பெயரின் எனக்கான ஒலி கேட்டு நாளாயிற்று

சத்தமாக கூப்பிடும் சந்தர்ப்பம் கிடைத்தும் சிலர்
நாகரீகம் கருதி தவிர்த்துவிடுகின்றன‌

கனவுக்கு ஒலி இருக்குமாயின்
கனவிலாவது கேட்கலாம்

பெயர் சூட்டுகையில் சொல்வதை போல‌
நான் மரணத்துக்கு பயணப்ப‌டும் முன்
காதில் முன்று முறை என் பெயரை சொல்லி கூப்பிடுங்கள்
இது நான் கேட்கும் இறுதி அங்கீகாரம் - சத்யா




Wednesday, August 3, 2011

நடைமுறை தீவிரவாதம் - 1


















பத்து நாளாய் மாற்ற முடியாமல்
தன்னை ஏமாளியாய் பிரதிபலித்த‌
கிழிந்த‌ 50 ரூபாய் நோட்டை
குருட்டு பிச்சைக்காரனுக்கு தர்மமாய் தள்ளிவிட்ட‌தோடு
கடந்து சென்றவர்களின் வியப்பயையும்
சம்பாதித்து விட்ட பெருமிதத்தோடு செல்கிறான்
சாதரணன் என்று அழைக்கப்படும் இந்த சமூக தீவிரவாதி


இப்படிக்கு மனிதனாய் மாற முயற்சிக்கும் சக தீவிரவாதி -  சத்யா

Thursday, July 7, 2011

இருந்தும் சொல்லி திரிகிறேன் நான் நானாக வாழ்வதாக!
















அனுபவிக்காமல் உணர்ந்த‌
அடையாளம் பெறாத‌
பிறரின் ரகசிய‌ வலிகளை  எழுத்துவிக்கமுடியவில்லை
[அவ்வலிகளுக்கு உடையதாரியாய்
என்னையே உருவகித்துவிடுவார்களோ
என்ற குழப்பத்தில்]
 
ஏற்கப்படாம‌ல் விமர்சிக்கப்படும் பிறர்
உணர்வுகளை ஏற்றுக் கொண்ட போதும்
அங்கிகரித்தாய் அறிவிக்க முடியவில்லை
[எங்கே! என் அங்கீகாரத்தை சொந்த வாழ்கையோடு
இணைத்து சிலாகித்துவிடுவார்களோ என்ற பயத்தில்]
 
முக்கால்வாசி உணர்வுகளை
முகமூடியில்லாமல் வெளிபடுத்தமுடியவில்லை
இருந்தும் சொல்லி திரிகிறேன்
நான் நானாக வாழ்வதாகவும்
சுதந்திரம் கிடைத்த அறுபத்து மூன்று ஆண்டுகள்
ஆகிவிட்டாதாகவும்       
                                      - சத்யா


Tuesday, July 5, 2011

காலத்திடம் எல்லோரையும் போல நாமும் தோற்றுப்போனது


தர்மத்திலிருந்து பிறழ்ந்துவிட்ட‌
நடைமுறை நியாயங்களிலும்
யதார்த்த வாழ்கையால்
காய்ந்துவிடும் உண‌ர்வுகளிலும்
எல்லாரையும் போல் ஒன்றிவிடகூடாதென‌
உறுதியாய் இருந்தோம் நாம் இருவரும்
நம் உறவின் ஆழம் மறந்து சந்தித்த‌
ந்த‌ நொடியில் புரிந்தது
காலத்திடம் எல்லோரையும் போல
நாமும் தோற்றுப்போனது
தொலைந்த போன என் கொள்கைகளையும்
தூசி படிந்த என் கனவுகளையும்
புரட்டி பார்க்காவாவது
நான் உன்னை அடிக்கடி சந்திக்க வேண்டும் - சத்யா

Friday, June 24, 2011

எப்படி புரியவைப்பது உனக்கு!












காரணமின்றி  நான்
சண்டையிட்டு அழுவதாய்
அழுத்துக் கொள்கிறாய்
நீ கண் துடைத்து தோள் சாய்த்து
சொல்லும் ஆறுதலுக்காய் தான்
இத்தனையும் என்று!
எப்படி புரியவைப்பது உனக்கு! - சத்யா

Friday, May 6, 2011

எதற்காக இருக்ககூடும் என் நிறைவேறாத கனவுகள் ??











  
எதற்காக இருக்ககூடும் என் நிறைவேறாத கனவுகள்
என்று சலித்த‌ ஒரு நாளில் - உணர்ந்தேன்
நிஜமாகும் கனவுகள் யாவும்
கடந்து போய்விடும் கூடும்
என் கற்பணையை வறுமையாக்கி
வெறுமையை துணையாக்கி - பின்
கனவுகள் தேடி அழைவதைவிட சிறந்தது
கனவுகள் சுமந்து திரிவது - என்று!!
                                                                          - கனவுகளுடன்  
                                     சத்யா


Thursday, May 5, 2011

கடவுளும் பகுத்தறிவில்லாதவரோ!!


பாவத்தை கரைக்க வேண்டி கருப்பு பணமும்
செல்வத்தை சேர்க்க சொல்லி செல்லாத‌ பணமும்
தப்பிக்க வழி கேட்டு கள்ள நோட்டும்
குவிந்து வழிந்தது கோவில் உண்டியலில்
கணக்கு பார்க்க வந்த கடவுள்
கலக்கமுற்று நின்றார்
 








மனிதன் தன்னையும் பகுத்தறிவில்லாத குருடன் என்று நினைத்து விட்டானோ” 
                                   - சத்யா

Thursday, April 28, 2011

மனிதனின் ஆயுதம்

 

 மனிதன் மற்றவரிடமிருந்து
தப்பிக்க கண்டுபிடித்த ஆயுதம்
புன்னகை !

                                                   

  

மனிதன்உற்றாரிடமிருந்து 
தப்பிக்க கண்டுபிடித்த ஆயுதம்
கண்ணீர் !




 




 மனிதன் தன்னிடமிருந்து
தப்பிக்க கண்டுபிடித்த ஆயுதம்
கடவுள் !

Wednesday, March 16, 2011

மனிதன் என்பவன் யாதெனில்




          




உலகம் தன் வரலாறை எழுதிக்கொள்ள‌
பயன்படுத்தும் எழுதுகோள்களே
மனிதர்கள் !   

Thursday, February 24, 2011

தண்டிக்க துடிக்கிறேன் உடன் கட்டை ஏறுதலை ஒழித்தவனை!!

நீ இல்லாத இரவுகளை விட கொடுமையானது
நீ இல்லாத விடியல்கள் - விழிக்குமுன்
நினைவுக்குள் இம்சிக்கிறது விழித்தால் நீ
இருக்க போவதில்லை என்ற நிஜம்

நான் என்னை பார்க்கும் கண்ணாடி முதல்
நீயின்றி எனை பார்க்கும் உலகம் வரை
அத்தனையும் உன்னயே பிரதிபலிக்க‌
ஒழிய இடமில்லாமல் ஒடும் அகதியானேன்
 
ஒர் கல்ப கோடி வருடம் வாழ‌  வகுத்து வைத்த
ஆசைகள் அனைத்தும் நினனைவோடு துரத்த‌
வெள்ளை நான் உடுத்தாத போதும்
வெறுமை எனை உடுத்த‌
பார்த்திபனாய் செய‌லற்று  நிற்கிறேன் மன‌ குருஷேத்திரத்தில்



தலையனையின் அரவணைப்பும்
உன் ஆடைகளின் ஸ்பரிசமும்
உயிருக்குள் விரிசலாய் விழ‌
உன் புகை படமுன் கண்ணீரால் இறுகுகிறேன்






இந்த கண்ணீரில் கரைவது என் காமமா? சோகமா?
இந்த அழுகை உன் மரணம் குறித்தா? என் எதிர்காலம் குறித்தா?
தண்டிக்க துடிக்கிறேன் உடன் கட்டை ஏறுதலை ஒழித்தவனை!
                                             - சத்யா
Enhanced by Zemanta

Friday, February 18, 2011

அறிவாளியாக அறியப்பட்டபின் அத்தனைக்கும் அனுமதி மறுக்கபட்டது

















அறிவாளியாக அறியப்பட்டபின் அத்தனைக்கும்
அனுமதி மறுக்கபட்டது அழுகை உள்பட‌

வியாபார சந்தையில் இடம் கேட்கையில்  -
சொல்வதை சலிக்காமல் செய்பவர்களே போதும்
யோசிப்பவர்கள் தேவையா என
யோசித்து சொல்வதாக ஒரங்கட்டபட்டேன்

குரோதங்கள் வெளிபட்டுவிடுமோ என்ற‌ (சிலரது) பயத்தினாலும்
சுயநலத்தை மறைக்கமுடியாதோ என்ற‌ (பலரது) பதட்ட‌த்தினாலும்
உறவு சந்தையிலும் ஒதுக்கப்பட்டேன்
 
குடும்ப வ‌ழக்கங்களை அப்படியே
பின்நடத்தும் தலையாட்டிக‌ளே போதும்
சிந்தனைவாதிகளுக்கு இடமில்லை என
திருமண சந்தையிலும் நிராகரிக்க பட்டேன்
 
எப்படியாவது எதிலாவது இணைத்துக் கொள்ள
மனு கோரிய‌  போதெல்லாம்
ஆட்டு மந்தையில் ஓநாய்க்கு இடமேது என பதில் வந்தது
மனிதர் என்பதை மறந்து என்னை ஓநாயாக்குவதற்காக‌
அவர்களும்  ஆடாகி போயிருந்தார்கள்
 
ப‌குத்தறிவை வைத்து கொண்டு நான் இப்படி படாதபாடு படுவதைவிட‌
என்னையும் ஆட்டு மந்தை ஆடாகவே மாற்றிவிடேன் இறைவா!
                                             - சத்யா
Enhanced by Zemanta

Wednesday, February 16, 2011

வேறொன்றும் வேண்டாம் எனக்கு ஒரு முறை உன்னோடு நடக்க வேண்டும்


















பிரிந்துபோன‌  பிரியமான‌ தோழிக்கு,

உன்னிடம் சொல்வதற்காக பதபடுத்திவைத்த நிகழ்வுகள் யாவும்
உன்னை சந்திக்கும் முன் பட்டுபோய்விடுமோ என்ற பயத்தில் எழுதும் கடிதம்.
அத்தனையும் இருந்தும் நிறைவாய் இல்லை நம் நாட்கள் போல் இந்நாட்கள்
உன்னுடன் ரசிக்கவும், உன்னுடன் சுவைக்கவும் சேமித்தவைகள் அனைத்தும்
நினைவுக‌ளை தாண்டி நம் பிரிவின் நீளத்தை உணர்த்துகிறது
பகிர்தல் நிமித்தம் இடம் பெறாமையால்
முழுமையடையாமலே முடிந்துவிடுகின்றன என் பொழுதுகள்
அலைபேசியில் உன் குரல் கேட்டு அழுத்துவிட்டது,
நிகழ்ந்ததுநினைத்தது, படித்தது, பார்த்தது, கேட்டது, ரசித்தது என‌
அத்தனையையும் அனுப்ப முடியவில்லை குறுந்செய்தியில்.
திறக்க படாத உன் மின்னஞ்சலில் பிரிக்கப்படாத
கடிதமாய் உறங்குவதிலும் விருப்பமில்லை எனக்கு.
வேறொன்றும் வேண்டாம் எனக்கு  ஒரு முறை உன்னோடு நடக்க வேண்டும் 
உலகின் ஒரு விளிம்பிலிருந்து வாழ்வின் மறு விளிம்பு வரை
எழுதிவைத்து செல்வேன் உயிலின் கடைசி வரியாய்
உன் அருகே புதைக்க வேண்டும் என்று
சொல்லி வை உன் குடும்பதினரிடம் உன்னை
எரித்து விட போகிறார்கள்
                  - சத்யா 
Enhanced by Zemanta