logo

g

Monday, March 5, 2012

முந்தைய தலைமுறையிடம் சில கேள்விகள்??















நான்கு பேர் உன்னை பார்த்து
பொறாமைப்படும்படி வாழ்
என்று தானே  போதிக்கிறீர்கள்
நான்கு பேர் வாழ்த்தும்படி வாழ் என்றல்லவே! பின்
நாங்கள் எப்படி சமதர்மம் மிக்க
சமூகத்தை உருவாக்க முடியும்?

 காசு தான் மதிப்பென்றும்
அதிகாரம் தான் சுதந்திரம்
என்று தானே   சொல்லி  தருகிறீர்கள்! பின்
நாங்கள் எப்படி அறிவையும், உறவையும் தேடுவோம்?

 பங்காளி பையனை விட அதிகம் படித்துவிடு
சொந்த பந்த சுற்றத்தை விட அதிகம் சம்பாதித்துவிடு
ஊரே வியக்கும்படி வாழு என்று
வெட்டி வைராக்கியத்தை நெஞ்சில் விதைத்து
பணத்தையும், ஆடம்பரத்தையும் தேடி
ஓட தூண்டியது நீங்கள் தானே?

குழந்தை பருவத்தில் நீதி கதைகள் சொல்லி 
உயர் பண்புகள் ளர்த்த நீங்கள் தானே
இளமை பருவத்தில் நடைமுறை நுணுக்கங்கள் என்ற பெயரில் 
தவறுகளை சகித்துக்கொள்ளவும்
அந்தஸ்து காக்க பகட்டு பொய்கள் சொல்லவும்
முன்னேற்றத்துக்கு ஜாதியை பயன்படுத்திக் கொள்ளவும்
முடியாவிட்டால் லஞ்சம் கொடுக்கவும் பழக்கப்படுத்தி
வாழ்கையை வர்த்தக முறையில் அணுக கற்றுக் கொடுத்தது

பிறர் பொருளை விரும்பாதே என்ற நீங்கள் தானே
வசதி அதிகம் படைத்த ஒற்றை பெண்/ஆண்  உள்ள
வீடாக வரன் பார்த்து வார்த்தை ஒப்பந்தமில்லாமலே
வரதட்சணை வாங்குவது/வசதியை பெருக்கிகொள்வது

நிமிர்ந்து நில் என்ற நீங்கள் தானே
வளர்ச்சிக்காக வளைந்து நில் முடிந்தால் 
நேர்மையை கூட வளைத்து நில் என்றீர்கள்?

சில உறவுகளை தக்க வைத்துகொள்ள
விருப்பங்களை விற்கலாம் என்றும்
சில வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள
கொள்கைகளை விட்டு கொடுக்கலாம் என்றும்
யதார்த்த சூட்சமங்கள் உபதேசித்தது நீங்கள் தானே?

நீங்கள் அமைத்துக்கொடுத்த லட்சியத்தை நோக்கி
நீங்கள் சொல்லி தந்த வர்த்தக பாணியில் வேகமாக ஒடுகையில்
உங்களை இழுத்து செல்ல தெம்பின்றி 
விட்டு செல்கிறோம் முதியோர் இல்லங்களில்

இதே முதியோர் இல்லத்தில்
இளைய தலைமுறையின் மேல்
ஆதங்கப்பட்டு அங்கலாய்க்கும் ஏதோ ஒரு நாளில்
கொஞ்சம் ஆழமாக சிந்தித்து பாருங்கள்

உங்களின் சமூக அந்தஸ்து மேம்படுத்திய‌
 வழிநடத்தல் தான் 
உங்களையும் ஓரம்கட்டி 
எங்களையும் ஓய்வின்றி ஓட
செய்தது என்பது புரியலாம் – சத்யா

Wednesday, February 8, 2012

நட்பென்ன காதலின் பினாமியா?


காலம் கடந்த காதல்கள்
நட்பாக உருவகிக்கபடுவதும்
காலம் கடந்த நட்புகள்
காதலாக உருமாறுவதும்
எழுதப்படாத நியதிகளாகிவிட்டன

காமம்  கலக்காத‌  காதல்களும்
பொருந்தா காதல்களும் கூட
தன்னை  நட்பாகவே வகைபடுத்திக்கொள்கின்றன‌ !

காதலை நட்புக்காட்டி வழியனுப்புவதும்
நட்புக்குள் காதலை தேடிப் பார்ப்பதும்
நவயுக வாழ்வின்
நாகரீக சுவாரஸ்யங்களாகிவிட்டது

இதை உறவு இலக்கணங்களின் அறியாமை என்பதா?
இல்லை வரம்பு மீறல்களின் அரிதாரம் என்பதா?

பிரித்து பார்பதே கடினமாயினும்
கடவுளும் மதமும் வெவ்வேறே என்பது போல்
பிரித்து உணரவே முடியாதென்றாலும்
காதலும் நட்பும் வெவ்வேறே!

கடவுளின் அடையாளங்களை போலவே
நட்பின் தனித்துவமும்
மனிதர்களின் தேவைகளில் நசுங்கி
சுயமிழந்து விட்டது. 

இனி வரும் தலைமுறை
நாகரீகத்தின் பரிணாம வளர்ச்சியாய்
உறவுகளின் அடையாளங்களை சிதைக்குமாயின்
வேறொரு இயற்ககை சீற்றம் தேவையில்லை
மனித குலத்தை ஆழிக்க‌!!!!! - சத்யா



Tuesday, February 7, 2012

மரணம்


















யாருக்கும் நிராகரிக்கப்படாத‌
யாரையும் நிராகரிக்காத அற்புதம்
மரணம்!! - சத்யா

Monday, October 24, 2011

மனதை பாதுகாக்க பல நாட்கள் மரப்பாச்சியாய் வளம் வரவேண்டி இருந்த‌து















பெரிய மனுசியான உடனே
உணர்ந்துவிடவில்லை பெண்மையை
கொஞ்ச கொஞ்சமாக உணர்ந்து ரசித்த நாட்கள்
இன்னும் ஈரமாக நினைவில்
பெண்மையின் மென்மையிலும் தன்மையிலும்
கடவுளின் அருகாமையை உணர்ந்த‌தாய் ஞாபகம்
வெளிவிவரம் தலைக்கேறிய போது
சந்தோஷங்கள் யாவும் சங்கடங்களாய் உறுத்தியது.
மனதை பாதுகாக்க பல நாட்கள்
மரப்பாச்சியாய் வளம் வரவேண்டி இருந்த‌து
பேசி புழ‌ங்க வேண்டிய இடங்களில்
உணர்வுகளை மறைக்க‌ திமிர் காட்டி தப்பிக்க நேர்ந்தது
கள்ள பாராட்டுக்கள் தவிர்க்க
அலட்சியத்தை கற்க வேண்டியாதாயிற்று
ஆறுதல் என்னும் ஆயுதம் கொண்டு
சிறைபிடிக்க வருவோரிடம் கர்வம் காட்டி ஒளிய நேர்ந்தது.
இப்படி என்னையும் என் மனதையும் உனக்காக‌ பாதுகாக்கும் பொருட்டு தான்
என் பெண்மையின் மென்மையை இழக்க நேரிட்டது என்பதை எப்படி சொல்ல‌
என் பெண்மையின் வன்மை குறித்து கேலி செய்யும் உன்னிடம் - சத்யா

Wednesday, September 7, 2011

விலங்களுக்கு மட்டுமே நான் மனிதனாக தெரிகிறேன்!

  
அறிமுகத்திலோ அல்லது பழகிய பின்போ
எப்படியும் சந்திக்க நேர்ந்துவிடுகிறது
ஜாதியை அறிய முற்படும் மறைமுக கேள்விகளை!
 
அதில் தப்பியபோதும் பொருளாதாரத்தை
தரம் தூக்கி பார்க்கும் நவயுக நாகரீகத்திலிருந்து
மீள முடியவில்லை.
 
எல்லாம் பொருந்திய போதும்
ஏக்கம், ஏமாற்றம், இல்லாமை மற்றும் இழப்பு குறித்து
செய்ய‌படும் ஆராய்ச்சி தரும் வலி
எந்த அறுவை சிகிச்சையும் தருவதில்லை!
 
வேறு சாதி என்று தெரிந்த பின்னும் சுருங்கிய‌
நண்பனின் அம்மா முகமும்
ஆறு இலக்க சம்பளம் இல்லை என்று அறிந்த பின்
மாறிய அப்பாவின் நண்பர் முகமும்
இல்லாமை/இழ‌ப்புகள் குறித்து
உள்ளூர சந்தோஷத்துடன்
ஆறுதல்/ அறிவுரை சொல்லும்  சொந்தங்களும்
அடிக்கடி மனதோடு அரிப்பதுண்டு !



அத்தணை மனிதனும் ஏதோ
ஒரு காரணியின் அடிப்படையில்
ஒரு சிட்டையை என் மீது ஓட்டிவிட்டு
பின் அந்த சிட்டையின் அடிப்படையிலயே  என்னை
அறிமுகபடுத்தவும், விமர்சிக்கவும் செய்கிறான்.



எஞ்சிய வாழ்கையில் விலங்களுக்கு
மட்டுமே நான் மனிதனாக தெரிகிறேன்! - சத்யா


Monday, August 8, 2011

பெயர் கேட்க ஆசை


கடைசிவரை பத்திரமாக‌
பாதுகாக்க ஆசைப்பட்டு
தொலைத்ததில் அதிமுக்கியமான ஒன்று
என் பெயர்
!
 
பிறந்தவுடன் சொந்தமாகும் முதல் அடையாளம்
உலகத்திடமிருந்து கிடைக்கும் முதல் அங்கீகாரம்

தேடி தேடி வைக்கப்பட்டாலும்
பெயர் என்னவோ
பேருக்குத்தான் வைக்கபடுகின்றன‌
.
 
குழந்தை பருவத்தில் கொஞ்சலிலும்
படிக்கும் பருவத்தில் எண்களிலும் - மறைந்து
நாளாவட்டத்தில் நட்பில் சுருங்கி
காலப்போக்கில் சுயமிழந்து
அக்கா, சித்தி, அத்தை, மேடம் என
வெறும் உறவு முறையின்
அடையாளமாகவே நின்றுவிடுகிறது

வங்கி சலானிலும்,  அடையாள அட்டையிலும்
எழுத்துக்களாய் மட்டுமே தேங்கி நிற்கும்
என் பெயரின் எனக்கான ஒலி கேட்டு நாளாயிற்று

சத்தமாக கூப்பிடும் சந்தர்ப்பம் கிடைத்தும் சிலர்
நாகரீகம் கருதி தவிர்த்துவிடுகின்றன‌

கனவுக்கு ஒலி இருக்குமாயின்
கனவிலாவது கேட்கலாம்

பெயர் சூட்டுகையில் சொல்வதை போல‌
நான் மரணத்துக்கு பயணப்ப‌டும் முன்
காதில் முன்று முறை என் பெயரை சொல்லி கூப்பிடுங்கள்
இது நான் கேட்கும் இறுதி அங்கீகாரம் - சத்யா